search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ககன் தீப் சிங் பேடி"

    கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக ககன் தீப் சிங் பேடி இன்று காலை கடலூருக்கு வந்தார்.

    கடலூர் கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையை பலப்படுத்தும் பணி ரூ.22 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை ஆய்வு செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணியினை ஆய்வு செய்ய என்னை நியமித்து உள்ளனர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணியை ஆய்வு செய்து வருகிறேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கெடிலம் ஆற்றில் இருபுறமும் நிரந்தரமாக கரையை பலபடுத்தும் பணியும் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் மூலம் கடலூர் நகரில் உள்ள கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது வெள்ளம் ஊருக்கு புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். மேலும் கடலூர் மாவட்டத்தில் பரவனாறு,செங்கால் ஓடை, பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி, ஆகிய ஏரிகளில் தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்- கலெக்டர் சரயூ மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். #GagandeepSinghBedi
    ×